கிளிநொச்சி ஏ 9 வீதியில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றும் தருமபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் உந்துருளியில் செல்லும்போது ஏ 9 வீதியில் விபத்தில் சிக்கியிருக்கிறார்.
இச்சம்பவம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக
இடம்பெற்றுளது.
விபத்தை அடுத்து அவ்விடத்தில் கூடியவர்கள் 119 அவரச நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு தொடர்பினை ஏற்படுத்திவிட்டு நீண்ட நேரமாக காத்திருக்க நேர்ந்துள்ளது.
சுகாதாரத் திணைக்கள ஊழியர் ஒருவர் தமது திணைக்களத்தின் முன் படுகாயமடைந்து கிடந்தபோதும்
சுகாதார சேவை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவுவண்டி உட்பட பலவாகனங்களில் ஒன்றை எடுத்து படுகாயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க எவரும் முயலவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
குறித்த பணிமனையின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவர் விபத்து நடந்த சிறிதுநேரத்தில் அவ்விடத்தை கடந்து சென்றபோது நின்று விடயத்தை விசாரித்து அறிந்து விட்டு நடவடிக்கை எதுவும் எடுக்காது சென்றுவிட்டதாக பணியாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இறுதியில் கடமை நிமித்தம் அவ்வழியால் சென்ற கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வாகனம் ஒன்றே படுகாயத்திற்குள்ளான தாதிய உத்தியோகத்தரை கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளது.