அரசாங்கத்திற்கு பெரிய எதிர்ப்பு இருக்கின்றது, தற்போது நாட்டில் உள்ள நிலையை கருத்தில் கொள்ளாமல் நாட்டை முடக்காமல் இருப்பது தொடர்பாக பலதரப்பட்ட தப்பினாலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
துறை சார்ந்தவர்களும் நாட்டின் நிலையை முன்வைக்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமத்தில் 1 கி.மீ பாதைக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் ,
எமது நாட்டை பொறுத்தவரையில் தற்போது கொரோன தொற்று வீதம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது, இருந்தபோதும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரிய பாதிப்புகள் இல்லை, காரணம் அனேகமானோர் தடுப்பு ஊசிகளை ஏற்றி இருக்கின்றோம்.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இன்னும் 75 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. வீதிகளில் பணியாற்றுபவர்கள் கடைகளில் பணி புரிகின்றவர்கள் 18 வயதுக்கு குறைந்த பணியாளர்கள் தடுப்பூசிகளை ஏற்றினால் கணிசமான பிரச்சினைகள் மாவட்டத்தில் தீர்த்து வைக்கப்படும் இதனூடாக மரண வீதம் அதிகரிப்பதில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்.
மரண வீதம் அதிகரித்திருப்பது உண்மை, ஆனால் நாங்கள் சில வேலைத்திட்டங்களை தவிர்ப்போமானால் கிராமப்புறங்களில் வறுமை தலைதூக்க தொடங்கிவிடும், இன்றைய வீதி திட்டம் கூட இங்குள்ள கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு செயற்பாடக தான் இருக்கின்றது.
ஆனால் கிராம மட்டங்களில் உள்ள மீனவர்கள் விவசாயிகள் சாதாரண கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பற்றி சிந்திக்காமல் இவ்வாறு சிலர் அரசாங்கம் மீது குறை கூறுகின்றனர் .
நாட்டு மக்கள் அனைவரும் மரணித்த பிறகு எதற்கு நாடு என்று சிலர் கேட்கிறார்கள், பொறுப்பு மிக்க அரசாங்கம் என்ற ரீதியில் தடுப்பூசிகளை விரைவாக செலுத்தி இருக்கின்றது. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான மக்கள் தடுப்பு ஊசி ஏற்றி இருக்கின்றார்கள்.
உண்மையிலேயே கொரோனா தொற்று அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு பாரிய சவாலாக இருக்கின்றது. அதற்கும் முகம் கொடுத்து எமது மாவட்டத்தை பாதுகாத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய முக்கிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.