மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் நேற்று புதன்கிழமை மேலும் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பஸ்ஸியால மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களில் ஒருவரிடமிருந்து மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரான குணவர்தன என்பவருக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர் நிட்டம்புவ பிரதேசத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவராவார்.
ஏனைய இவரும் இதற்கு முன்னர் பாதுகாப்பு துறைகளுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகிறது.
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டமை தொடர்பில் நேற்று வரை 13 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 8 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு 3 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேற்று புதன்கிழமை இது தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிலரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.