அன்னை பூபதி யின் நினைவு தினத்தை அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.
இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல.
அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.
எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை.
இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறான வரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம். காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்
நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம்.
உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அனுஷ்டித்தால் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்த முடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தியாக தீபம் அன்னை பூபதி
நாளை ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்திய ஆக்கிரமிப்பு படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து (19.04. 1988 அன்று ) உயிர்நீத்த நாள்.
இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அமைதிப்படை எனும் போர்வையில் நுழைந்த இந்தியா தமிழரிடம் ஆயுதங்களை பெற்றதே அன்றி தமிழர் பகுதியில் இலங்கை அரசு நிறுவகங்கள் மற்றும் இந்தியாவின் காலை நக்கிய சில குழுக்களையும் ஆயுதங்களோடு உலவ அனுமதித்தது.
இந்த ஒட்டு குழுக்களின் காட்டிகொடுத்தலோடு வீடு வீடாக புகுந்து இந்திய படை தமிழ் இளைஞர் பலரை என 30 பேர், 40 பேரை இழுத்துச் செல்வார்கள். அவர்கள் யாரும் திரும்பி வந்ததேயில்லை. சுட்டுக்கொன்று கிணறுகளிலும், மலக்குழிகளிலும் போட்டுவிடும் இந்திய அமைதிப்படை.
10/10/1987 – தகவல்கள் வெளியே போகாமல் தடுக்க இலங்கை தமிழனத்துக்காக வெளிவந்த ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் டி.வியின் அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்த்தது இந்திய ராணுவம்.
காலையில் தூங்கி எழும் வீரர்களுக்கு சிறுநீர் மஞ்சளாக வந்தால் போதும், இதற்கு தமிழின பெண்கள் தான் காரணமென செக்கிங் என்ற பெயரில் கற்பை சூறையாடுவார்கள். உடல்பசி, சூடு தீர்ந்ததும் அப்பாடா என வருவார்கள் கண்ணியமிக்க இந்திய ராணுவ வீரர்கள்.
போர் நிறுத்த காலம் என அறிவிக்கப்பட்டதனால் ஆயுதமின்றி பயணித்த குமரப்பா, புலேந்திரன் அடங்கிய 17 புலிகள் October 1987 இல் கைது செய்யப்பட்டு பின்னர் தற்கொலை செய்து மரணித்தனர்.
கைது செய்யப்பட்ட 17 போராளிகளும் அமைதிப்படை இருந்த பலாளி ராணுவ தளத்திலேயே இலங்கை ராணுவம் வைத்திருந்தது.
21/10/1987 அன்று யாழ்ப்பாண மருத்துவமனையில் நுழைந்த இந்திய படை – மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 60 பேரை படுகொலை செய்தது. இந்திய படையின் பாது காவலில் தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய பயங்கரவாத அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.
அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார்.
1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் தான் அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். எந்த கோரிக்கையும் இந்திய அரசு ஏற்கவில்லை, பேச்சு வார்த்தை கூட நடத்தப்படவில்லை.
மாறாக அன்னை பூபதியின் கணவர் மற்றும் பிள்ளைகளை இந்திய இராணுவம் கைது செய்து மிரட்டியது. ஆயினும் அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 அன்று அவர் மரணமடைந்தார்.
அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார்.
ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை.
அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார்.முதலாவது, இந்திய அரசிற்கு தமிழர்கள் பிரதேச பேரினவாத நோக்கில் தேவையே அன்றி வேறு எந்த அக்கறையும் இல்லை.
இரண்டாவது, அகிம்சை போராட்டம் மனித உரிமைகளை ஓரளவு மதிக்கும் எதிர் தரப்பினரிடம் மட்டுமே பயனளிக்கும்.
இந்த இரண்டு பாடங்களையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும். இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
குறிப்பு – அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது
நெஞ்சகலா நினைவுகளில் பூபதி அம்மாவின் தியாக நினைவுகளும் நிறைந்திருக்கும். மண்ணில் இப்படி ஒரு விடுதலை தேவதை பிறந்த நாள்! தழல் வீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றும் பேதம் இல்லை என்பதை நிரூபித்த அன்னை பூபதி புகழ் வாழ்க!